கள்ள காதலனை, சினிமா பாணியில் 2-வது காதலனுடன் சேர்ந்து காதலியே விஷம் வைத்துக் கொன்ற துணிகரச் சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த டாக்சி ஓட்டுனர் ராஜேஷ் அண்மைக்காலம் வரை மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.
ஆனால், மதுப் பழக்கத்தால், தினந்தோறும் காரிலேயே உறங்கி வந்த ராஜேஷ்க்கு கள்ளக்காதலியும் உண்டு என்பது குடும்பத்தினர் அறியாதது.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி நண்பர்களுடன் மது அருந்திய அவர், அதிக போதையால் அங்கேயே மயங்கியதாக நண்பர்கள் ராஜேஷின் மனைவிக்கு போன் செய்தனர்.
அவர்களிடம் கெஞ்சிய மனைவி, கணவனை வீட்டில் கொண்டுவந்து விடும்படி கோரியுள்ளார். அப்போது, வீட்டுக்குள் வர மறுத்த ராஜேஷ், காரிலேயே உறங்கினார்.
காலையில் நீண்ட நேரம் எழாததால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை புதைத்தும் விட்டனர். ஆனால், ராஜேஷின் மறைவால் சோகத்தில் இருந்த மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு போலீசார் கூறிய தகவல், குலை நடுங்கும் ரகம். ஆம், ராஜேஷ் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.
ராஜேஷ்க்கு அதேப் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், இருவருக்குமான பழக்கம் கசந்த நிலையில் ராஜேஷ் தினசரி தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதனால் ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கள்ளக்காதலி பத்மாவதிக்கு, காரில் மதுபோதையில் ராஜேஷ் தூங்கும் தகவல் தக்க சமயத்தில் கிடைத்தது.இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பத்மாவதி, தனது புதிய கள்ளக்காதலன் மூலம், விஷம் கொடுத்து ராஜேஸை கொலை செய்த சதிச் செயல், அங்கு விழித்திருந்த சி.சி.டி.வி. கன கச்சிதமாக பதிவு செய்தது.
இதையடுத்து, ராஜேஷின் உடலை தோண்டி எடுத்து இன்று உடற் கூராய்வு செய்தபோது, அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தது ஊர்ஜிதம் ஆனது.
உடனடியாக பத்மாவதி, அவரது 2-ம் காதலன் குமரேசன் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.