பெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (மே-18) நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கங்கையம்மனுக்கு குடி அழைத்தல், மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. 12 ஆம் தேதி இரவு மாரியம்மனுக்கும், 15 ஆம் தேதி இளங்காளியம்மனுக்கும் பூச்சொரிதல் விழாவும், இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மாரியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், மாலையில் குடி அழைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தழுதாழை கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்து செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.
இத்திருவிழாவில் தழுதாழை, அரும்பாவூர், மேட்டூர், மலையாளப்பட்டி, வெங்கலம், தொண்டைமாந்துறை, பெரியம்மாபாளையம், கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.