Perambalur: Agricultural machinery at subsidized rates; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பில் 269 பேருக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான இலக்கு கிராமம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டத்தில் சிறு/குறு, மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், பெரு விவசாயி பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படும். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியமும், பொது பிரிவைச் சார்ந்த சிறு/குறு விவசாயிகள் நெல் நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் மற்றும் தீவனம் நறுக்கும் கருவி ஆகியவற்றிற்கு கூடுதலாக 10 சதவீத மானியமும் வழங்கப்படும்.

விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அல்லது 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள Farmer Registry பதிவெண் கொண்ட விவசாயிகள்” உழவன் செயலியில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு” என்ற தொகுதியில் வேளாண்மைப் பொறியியல் மானிய திட்டங்கள் என்ற பிரிவைத் தேர்வு செய்து, விவசாயி தனது புகைப்படம், சாதிச்சான்றிதழ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு விவசாயிகள் எனில்), சிறு / குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், டிராக்டர் வாகன பதிவுச் சான்றிதழ் (டிராக்டரால் இயங்கக்கூடிய கருவிகளுக்கு), ஆதார் எண்ணுடன் தொடர்புடைய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 8 ஆம் தேதி அன்று, அம் மாதத்தில் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும், மற்றும் அதே மாதத்தின் 22 ஆம் தேதி அன்று, அம் மாதத்தில் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் தேர்வு முறையில் இணையதளத்தின் வாயிலாகவே ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 7708506988 என்ற பெரம்பலூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!