மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டுத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. இதில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , எம்ஜிஆர் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 4529 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் இருந்தபோது நடைபெற்ற பதவி ஏற்பில் கடைசியாக பங்கேற்றதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு, மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாக குறிப்பிட்டார்.