பெரம்பலூர் மாவட்டத்தில் 02.10.2015 அன்று தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணைப்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே வினாடி வினாப் போட்டி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பிரிவு, 9,10 ஆம் வகுப்பு பிரிவு, 11, 12 ஆம் வகுப்பு பிரிவு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அன்றைய தினமே பரிசுகளை வழங்கிப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் தனது அன்றாடப் பணிகளின்போது ஒருநாள் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுடன் பயணிக்கப்போவதாக தெரிவித்தார்.
அதன்படி 25 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது இன்று விசுவகுடி நீர்த் தேக்கத்தை (அணை) பார்வையிட்டு அவர்களுடன் உரையாடினார்.
அப்போது மாணவ,மாணவிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகிய மலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் விசுவகுடி அணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக இந்த அணையை உருவாக்கும் வகையில் அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணையைப் பார்க்க பொது மக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒருசாலை அமைத்திடவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் இத்திட்டத்தின் முலம் பயன்பெறும் ஆயிரத்து 450 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற விளக்கிய மாவட்ட ஆட்சியர் மலைப்பகுதியிலிருந்து அணைக்கு நீர் வரத்து பாதையை மாணவ, மாணவிகளுக்கு காட்டி சிறிது தூரம் அவர்களுடன் பயணித்தார்.
பின்னர், மாணவ, மாணவிகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். எப்படி படிக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த பயணத்தின்போது முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தன