வதந்திகளைத் தடுக்க இந்தியாவில் இனி ஒருவர் 5 முறை மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 கோடி மக்களுக்கும் அதிகமாகமானோர் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதில் தினந்தோறும் பல்வேறு குழப்பங்களை உருவாக்கும் செய்திகள் ஃபார்வேர்டு செய்யப்படுகின்றன. இதனால் வதந்திகளைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யவேண்டும் என மத்திய தகவல் நுட்பத்துறை அமைச்சகம் வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு 2 முறை கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை 5 முறைக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 முறை ஃபார்வேர்டு செய்து முடித்துவிட்டால், தானாகவே ஃபார்வேர்டு பட்டன் அழிந்துவிடும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுவருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரயிருப்பது குறிப்பிடத்தக்கது.