2-day tour of Tamil Nadu Governor in Ariyalur & Perambalur!

பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ? பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!