7 Tamils should be released to honor the Supreme Court recommendation Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 7 தமிழர்கள் விடுதலை குறித்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த பரிந்துரை வரவேற்கத்தக்கதாகும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர், ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கூடாது என்று வாதிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்த தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் மிகவும் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் தவறானது என்றும், 7 தமிழர்களும் இனியும் சிறைகளில் வாடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கருதுவதையே அதன் இந்த பரிந்துரை காட்டுகிறது. இது தான் மிகவும் சரியான, நியாயமான நிலைப்பாடும் ஆகும்.

ராஜிவ் கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மையாகும். ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சி.பி.ஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன.

புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இவ்வழக்கின் புலனாய்வில் சிபிஐ ஏராளமான குளறுபடிகளை செய்து இருந்ததாகவும், அவற்றைக் கருத்தில் கொண்டிருந்தால் யாரையுமே தண்டித்திருக்க முடியாது என்றும் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் முக்கியமானவரான கே.டி. தாமஸ் கூறியிருக்கிறார்.

ராஜிவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்துக் கொடுத்தது யார்? என்பதை சி.பி.ஐ.யால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பாவிகளை 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக் கொட்டடிகளில் அடைத்துக் கொடுமைப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும்.

மத்திய அரசும், சி.பி.ஐயும் கூறுவதைப் போல 7 தமிழர்களும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிறைகளில் அடைத்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது? இந்தியாவில் வாழ்நாள் சிறை தண்டனை என்பது 14 ஆண்டு கால சிறைத் தண்டனை ஆகும்.

எனினும், சிறைக்கைதிகள் நன்னடத்தைக் காரணமாக 8 முதல் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். இது போதாது… அவர்கள் இன்னும் வாட வேண்டும் என மத்திய அரசு நினைத்தால் அது மனிதநேய அரசாக இருக்க முடியாது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, துப்பாக்கிகளை வாங்கி பதுக்கி வைத்திருந்த நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் ஒன்றரை ஆண்டுகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால், எதற்காக என்றே தெரியாமல் சாதாரண பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக ஒருவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாட வேண்டும் என மத்திய அரசு கூறினால், இது யாருக்கான அரசு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதை இந்தியாவில் யாருமே எதிர்க்கவில்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ராஜிவ்காந்தி குடும்பத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பலரது குடும்பத்தினரும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

வழக்கை புலனாய்வு செய்த அதிகாரிகள், விசாரித்த நீதிபதிகள் என அனைத்துத் தரப்பினரும் 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மத்திய அரசு மட்டும் விடுதலைக்கு எதிராக பிடிவாதம் பிடிப்பது முறையல்ல.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!