Action needed to restore the 27 fishermen were arrested by the Sinhalese army! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 4 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சிங்களப்படையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

இராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த 22 மீனவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பழனி, கிருட்டிணன், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான 3 நாட்டுப் படகுகளில் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் வானகரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நெடுந்தீவு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

27 மீனவர்களும் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படை கைது செய்தது அத்துமீறிய செயலாகும். இதை இந்தியக் கடலோரக் காவல்படை அனுமதித்திருக்கக்கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 27 பேரும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப் பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் புதிய மீன்பிடித் தடை சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தராது என்றும் கூறப்படுகிறது. தவறு செய்யாத மீனவர்களுக்கு வழங்கப்படும் இத்தண்டனை மிகவும் கொடூரமானதாகும்.

27 மீனவர்களும் 2 ஆண்டுகள் சிறைகளில் அடைக்கப்பட்டால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். படகுகள் திருப்பித்தரப்படாவிட்டால் அவர்கள் நிரந்தரமாக வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

இதற்கெல்லாம் மேலாக, இதுவரை விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைது செய்து வந்த சிங்களப் படையினர் இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைதும் செய்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை சீண்டிப் பார்க்கின்றனர் என்று தான் கருத வேண்டியுள்ளது. இந்தப் போக்குக்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்பகுதி மிகவும் குறைவாக உள்ள நிலையில், தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் அடிக்கடி கைது செய்வதும், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதுமான சித்திரவதை விளையாட்டு தொடர்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!