Award for those who have worked well for the welfare of persons with disabilities; Perambalur Collector Notification!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2024 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.25,000/-ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்), மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.50,000/-ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படவுள்ளது.
மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவுச்செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 05.07.2024க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு விருதாளர்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வில் முதலமைச்சரால்மாநில விருதுகள் வழங்கப்படும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.