Chief Minister M.K.Stal’s visit to Perambalur: Minister Sivashankar inspects Katiravan MLA University!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 12ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார். அந்நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் மூலம் மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதால் நிகழ்ச்சியை நடத்த கதிரவன் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மைதானத்தில் விழாவிற்கான பந்தல் அமைய உள்ள இடம், பயனாளிகள் மற்றும் பொதுமக்களை அமர வைக்கும் இடம், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான வழித் தடங்களையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போதிய அளவில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும், பயனாளிகள் மற்றும் பொதுமக்களை அழைத்துவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான இடங்களை தேர்வு செய்திட வேண்டும் என்றும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்படவுள்ள திட்டங்கள், திறந்து வைக்கப்படவுள்ள திட்டங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் செய்திட வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கலெக்டர் கிரேஸ் பச்சாவ், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் வருவாய், காவல்துறையை சேர்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.