Demonstration of the KMDK to demand a separate sector for water management: ER Eswaran
தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை எல்லாம் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க முடியும்.
இந்தாண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையில் கர்நாடக அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு 5-ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி வழிந்தது.
காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த தண்ணீரில் முக்கால்வாசி உபரிநீராக கடலில் கலந்ததே தவிர தமிழக மக்களுக்கு துளியும் பயன்படவில்லை. அதேபோல் பவானிசாகர் அணையும், அமராவதி அணையும் நிரம்பி உபரிநீர் வீணாக கடலில் கலந்தது.
மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு எடுத்துவிட்டால் தமிழகத்தின் மொத்த தண்ணீர் தட்டுப்பாடும் தீர்ந்துவிட்டது போல ஒரு மாய தோற்றம் உருவாகிறது.
தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளை தவிர உள்மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையே தொடர்கிறது.
கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை மக்களின் பயன்பாட்டிற்காக உள்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களையும், நதிகளை இணைக்கும் திட்டங்களையும் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.
அமராவதி, நொய்யல், திருமணி முத்தாறு மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்டவைகளில் சாயக்கழிவுகளை அனுமதி இல்லாமல் கொட்டி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீரும் மாசடைந்து வருகிறது. இந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் புற்றுநோயாலும், மலட்டுத்தன்மையாலும் மற்றும் தோல் வியாதிகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் குறிப்பாக கொங்கு மண்டல மக்களுக்கு வாக்குறுதிகளாக கொடுக்கப்படும் நீர்பாசன திட்டங்களான மேட்டூர் உபரிநீர் திட்டம், திருமணி முத்தாறு – கோரையாறு இணைப்பு திட்டம், சரபங்கா – வசிஷ்ட நதி திட்டம், அவினாசி – அத்திக்கடவு திட்டம், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம்,
மணியாச்சி – வழுக்குபாறை திட்டம், T.N.பாளையம் – வேதபாறை தடுப்பணை திட்டம் மற்றும் தோனிமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றக் கோரியும், ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதை தடுக்கக்கோரியும், ஏரி, குளங்களை சரிவர தூர்வார வலியுறுத்தியும், சேலத்தில் எனது தலைமையிலும்,
தருமபுரியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜி.அசோகன் தலைமையிலும், ஈரோட்டில் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ். சூரியமூர்த்தி மற்றும் மாநில தொழிற்சங்க தலைவர் எஸ். ஜெகநாதன் தலைமையிலும், கோவையில் மாநில விவசாய அணி செயலாளர் எம்.கோபால்சாமி தலைமையிலும்,
திருப்பூரில் மாநில தலைமைநிலைய செயலாளர் எஸ்.சுரேஷ் பொன்னுவேல் மற்றும் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு தலைமையிலும்,
கரூரில் மாநில துணைப்பொதுச்செயலாளர் சக்தி ஆர்.நடராஜன் மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் விசா ம.சண்முகம் தலைமையிலும் வருகின்ற 12 -ஆம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.