For the first time in Namakkal district, jockeys can be hiked by 5 feet The Old House

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக 40 டன் எடை கொண்ட ஒரு வீட்டை பெயர்த்து, 300 ஜாக்கிகள் மூலம் அப்படியே தூக்கி, 5 அடி உயர்த்தும் புதிய கட்டிட தொழில்நுட்பப் பணிகள் நாமக்கல் நகரில் நடைபெற்று வருகிறது. இதைப்பார்த்த பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர்.

மழைக்காலம் என்றால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்தோடி வீடுகள் மற்றும் வீதிகளை வெள்ளக்காடாக்கி விடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது வீடுகளை இடிக்காமல் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஜாக்கிகளைப் பயன்படுத்தி வீட்டை அப்படியே தூக்கும் தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் கொங்குநகர் மூன்றாவது தெருவில் வசித்து வரும் தொழிலதிபர் வீரமணி என்பவர் தனது வீட்டை 5 அடி தூக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து வீரமணி கூறியதாவது: நாங்கள், நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கொங்குநர் 3வது வீதியில் உள்ள எங்கள் வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் வீடு 1985ம் ஆண்டு கட்டப்பட்டது.

எங்கள் வீடு கட்டியபிறகு எங்கள் வீதியில் நகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும்பணி நடைபெற்றது. ரோட்டின் உயரம் அதிகமானதால் எங்கள் வீடு ரோட்டிற்கு கீழ் சுமார் 5 அடி பள்ளமாக போய்விட்டது. இதனால் மழைகாலங்களில் மழை நீர் வெள்ளமாக எங்கள் வீட்டிற்குள் புகுந்து மிகவும் சிரமப்பட்டோம்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். இதை தவிர்க்க பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள், வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள், கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் பார்க்கிங் ஆக்கி விடுங்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும் உங்களுக்கு 40 சதவீதம் என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம்.

இறுதியில், ஈரோட்டில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது, வீட்டை இடிக்காமல், வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் ஜாக்கிகளை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு தூக்கி வைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார்.

அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து 5 அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு வீரமணி கூறினார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வீடுகளை உயர்த்தி தரும் அரியானாவை சேர்ந்த ராஜூ என்பவர் கூறியதாவது:

ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டிட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம்.

முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம்.

நாமக்கல் மாவட்டத்தல் முதல் முறையாக வீரமணி என்பவரின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 25ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது என்றார்.

வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறையில் நாமக்கல்லில் உள்ள வீரமணியின் வீட்டில் 12 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 1,400 சதுர அடி, 40 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தி வருகின்றனர்.

முதலில் சுவர்களின் இருபுறமும் சுமார் 2 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தேவையான உயரத்திற்கு 12 பேரும் ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. 5 அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 500 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர்.

சுமார் 5 மாடி உள்ள கட்டிடத்தை கூட எந்தவித சேதமும் இல்லாமல் ஜாக்கிகள் மூலம் தேவையான உயரம் உயர்த்த முடியும் என்றும், முதல் மாடியில் வசிப்பவர்கள் மட்டும் வீடுகளை காலி செய்தால் போதும், வீட்டை உயர்த்திவிட முடியும், மற்றும் 4 மாடிகளில் வசிப்பவர்கள் அப்படியே இருக்கும்போதே வீட்டை உயர்த்திவிட முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!