Gangster attack on TV reporter in Perambalur: Four and half pound gold chain flush
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39), இவர் மாலைமுரசு தொலைக்காட்சியில் பெரம்பலூர் மாவட்ட செய்தியாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு சூதாட்டம் நடத்தி வரும், சூதாட்ட கும்பல் தலைவன் சோமசுந்தரம் தலைமையில் லட்சக்கணக்கான ரூபாய் பிணையமாக வைத்து 38 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மங்களமேடு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து, நேற்றிரவே காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
இதனை மாலைமுரசு செய்தியாளர் சரவணன் உட்பட சில செய்தியாளர்கள் வீடியோ எடுத்து செய்தியாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சோமசுந்தரம் உள்ளிட்ட 38 பேரும், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜராகி அபராதம் செலுத்த வந்தனர்.
இந்த தகவல் அறிந்து செய்தி சேகரிக்க செய்தியாளர் சரவணனும், ஒளிப்பதிவாளர் அரவிந்த்தன் என்பவரும் சென்று வீடியோ எடுத்துள்ளனர்.
இதனை கண்ட சூதாட்ட கும்பல் செய்தியாளர் சரவணனையும், ஒளிப்பதிவாளர் அரவிந்தனையும் சுற்றி வளைத்து சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தையில் திட்டி, சரமாரியாக தாக்க முற்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு நடந்தது.
மேலும் செய்தியாளரின் நான்கரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டதோடு, கேமரா மற்றும் செல்போனை பிடுங்கி அதிலிருந்த வீடியோ பதிவுகளை அழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதை அங்கு வந்த சக செய்தியாளர்கள் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் சரவணனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.