Government to reject Karnataka petition PMK founder Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ள அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது. கர்நாடகத்தின் இக்கோரிக்கையை ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; ஏற்றுக்கொள்ள முடியாது.

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள சாத்தியக்கூறு அறிக்கை குறித்து பல்வேறு துறைகளிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியதாகவும், அப்போது மேகதாது அணை சிக்கல் குறித்து தமிழக – கர்நாடக முதலமைச்சர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக நிதின்கட்கரி வாக்குறுதி அளித்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவை அனைத்துமே தமிழகத்துக்கு எதிரானவையாகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளை காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன. கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும் தான் காவிரியில் புதிய அணைகளை கட்ட முடியும் என்பது தான் மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும். நிதின் கட்கரிக்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி இதை எழுத்து மூலமாகவே உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்து 09.06.2015 அன்று உமாபாரதி எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கியிருந்தார்.

‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.

அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’ என்று உமாபாரதி கூறியிருந்தார். இது தான் அரசின் கொள்கை எனும் போது மேகதாது அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவில்லை என்பதால் அதைக் காரணம் காட்டி, கர்நாடக அரசின் சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்க வேண்டும். அதை விடுத்து கர்நாடகக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிப்பதே ஒரு சார்பு நடவடிக்கையாகும்.

அதுமட்டுமின்றி, மேகதாது அணை தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களையோ, அதிகாரிகளையோ அழைத்துப் பேச மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. மேகதாது அணைக்கு கடை மடை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையை அம்மாநில அரசு தான் செய்ய வேண்டுமே தவிர, அதன் பிரதிநிதியாக மத்திய அரசு செயல்படக்கூடாது.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் அதை கர்நாடகம் செயல்படுத்தவில்லை. அப்போது மத்திய ஆட்சியாளர்கள் கர்நாடக அரசிடம் பேசி, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுக் கொடுத்திருந்தால் மத்திய அரசின் நடுநிலையை பாராட்டியிருக்கலாம். அப்போதெல்லாம் வாய்மூடி அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தை வளைக்க முயல்வது தமிழக மக்களுக்கும், உழவர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் திருப்பி அனுப்ப வேண்டும். மேகதாது குறித்து பேச்சு நடத்துவதற்காக மத்திய அரசுத் தரப்பிலிருந்தோ, கர்நாடக அரசுத் தரப்பிலிருந்தோ விடுக்கப்படும் அழைப்புகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!