Governments should ensure the safety of Tamil Nadu students studying in others States: KMDK Eswaran

நாமக்கல் : வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை :

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆகவேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி. தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தொலைதூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள். ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு படிக்க செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்கள் இறப்பது தொடர்கதையாகிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016 –ஆம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018 -ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.

டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு படிக்கச் செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து களையாமல் இத்தகைய உயரிழப்புகளை தடுக்க முடியாது.

தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை முழுமையாக வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.

மாணவி ஸ்ரீமதியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!