Gutka scam CBI scam: Why is he still reluctant to remove Vijayabaskar? PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை சட்டவிரோதமாக விற்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்கியது தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 40&க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். குட்கா ஊழலை மூடி மறைக்க சதி நடந்த நிலையில், அந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண நடத்தப்படும் இச்சோதனைகள் சரியான நடவடிக்கையாகும்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் தவிர, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.வி.இரமணா வீடு, காவல் உயரதிகாரிகளின் வீடுகள் ஆகியவை சோதனை நடத்தப்படும் இடங்களில் முக்கியமானவை ஆகும். இந்த சோதனைகளில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவரும், எம்.டி.எம். குட்கா நிறுவனத்தின் பங்குதாரருமான மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குட்கா விற்பனைக்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டும் ரூ.40 கோடி கொடுக்கப்பட்டதற்கான குறிப்புகள் குட்கா ஆலையில் 2016-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வருமானவரி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன. அமைச்சருக்கு கையூட்டு கொடுத்ததை வருமானவரித்துறை விசாரணையில் மாதவராவும் ஒப்புக்கொண்டார்.

அதன் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு வருமானவரித் துறை முதன்மை ஆணையர் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி எழுதியிருந்தார். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி வழக்குத் தொடரப்பட்ட போதிலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தான் குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

தமிழக கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கில் அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் இல்லாத நிலையில், அவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக் கொள்ள சி.பி.ஐ. மறுத்து விட்டது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் புதிய வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

யார், யாருக்கெல்லாம் குட்கா ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு, முதற்கட்ட ஆதாரம் உள்ளவர்களின் வீடுகளில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று சி.பி.ஐ. சோதனைக்கு உள்ளானவர்கள் அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

குட்கா ஊழலின் முக்கியக் குற்றவாளி அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதே ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்படுவதால், அவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இடைப்பட்டக் காலத்தில் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனையும், இப்போது சி.பி.ஐ. சோதனையும் நடத்தப்பட்டுள்ளன. அமலாக்கப்பிரிவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறது. இதன் மூலம் மூன்று மத்திய அமைப்புகளின் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மாநில அமைச்சர் என்ற சிறப்புப் பெருமையை விஜயபாஸ்கர் பெற்றிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும் அவரை பதவி நீக்காமல் காப்பாற்றி வருவதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நலன் காக்கும் அரசு அல்ல…. ஊழல் அமைச்சர்கள் பதவி காக்கும் அரசு என்பது உறுதியாகியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இனியும் தயங்காமல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தமிழக அரசு பதவி நீக்கம், பணி நீக்கம் செய்ய வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!