Hurricane winds near in Perambalur: Perali Toll booth post roofs blown off!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள, பெரம்பலூர் – அரியலூர் சாலையில் கடந்த சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு டோல் கேட் கட்டப்பட்டது. ஒரு ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திறந்த நாளே மூடப்பட்டது. எனவே எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. ஆட்களும் வேலை செய்யவில்லை.
இந்நிலையில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் டோல்கேட்டில் அமைக்கபட்ட தகரத்திலான மேற்கூரை மற்றும் இரும்பு கம்பிகள் அனைத்தும் சூறைக்காற்றில் பல மீட்டர் தூரம் எடுத்து சென்று வீசியது. பரபரப்பாக வாகனங்கள் இயங்கி கொண்டு இருக்கும் அரியலூர் – பெரம்பலூர் சாலையில், சம்பவத்தின் போது, போக்குவரத்து எதுவும் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் இன்றி தப்பித்தது. அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் மற்றும் சுற்றுக் காவல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
முன்னதாக மாலை சுமார் 4 மணி அளவில், பெரம்பலூர் நகரில் ஒரு மணிநேரம் பலத்த காற்றுடன் ஒரு மணிநேரம் நல்ல மழை பெய்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழையும், மழைத்தூறலும் பெய்தது.