In Perambalur District, Gram Sabha Meeting on the occasion of Local Bodies Day; Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர்-01 (உள்ளாட்சிகள் தினம்) அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம் 23.11.2024 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.
அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களை கவுரவித்தல்,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம், இதர பொருட்கள் ஆகிய 10 கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
23.11.2024 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராம சபைக் கூட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.