It is not a matter to say the resignation of the CM: L. Ganesan MP interview
நாமக்கல்: வழக்கு விசாரணையே தொடங்காத நிலையில், தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என சொல்வது முறையானது அல்ல என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். நேற்று, நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக எந்த பெண்களும் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என முயற்சிக்கமாட்டார்கள்.
ஐயப்பன் மீது பக்தியே இல்லாத ஒருவர் தொடர்ந்து வழக்கிற்கு, இதுபோன்ற தீர்ப்பு வந்திருப்பது நீதிமன்றத்தின் நடைமுறைக்கு எதிரானது. ஆனாலும் கூட தற்போது கோயில் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரித்து நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசாங்கத்தை ஆலயத்தை விட்டு வெளியேற்றுவோம். தெய்வநம்பிக்கை உள்ள தனியாரிடம், ஆலை நிர்வாகத்தை ஒப்படைப்போம். நாங்கள் இதை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். இது எங்கள் அடிப்படை கொள்கை, எங்கள் கோரிக்கை நியாயமானது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது.
பசுவதை தடுப்பு என்பது அரசியல் சாசனமே பரிந்துரைத்த விஷயம். நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில், பசுவதை தடை செய்யப்படுகிறது.
ஊழலை எதிர்ப்பதற்காக அரசியல் களத்தில் குதிக்கிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சியுடன் சேர்வது பொருத்தமாக இருக்காது. எதற்காக கட்சி துவங்கினேன் என முதன் முதலில் சொன்னாரோ அதற்கும், இதற்கும் எந்தளவுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு சமமான ஆளுமை இல்லை. கருணாநிதிக்கு சமமான ஆளுமை திமுகவிலும் இல்லை. அதிமுக, திமுக வேண்டாம் என்ற மன நிலையில் பெரும்பாலன மக்கள் உள்ளனர். அவர்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போடுவார்கள் என நம்புகிறேன்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆட்சியை தொடர முடியுமா என்று சொல்லும் அளவுக்கு, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்த சூழலில் இருந்து தப்பி ஏதோ ஒரு வகையில் ஒற்றுமையை உருவாக்கி ஓராண்டுக்கு மேலாக ஆட்சியை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதுவே ஒரு ஆறுதலான செய்தி.
மக்கள் தந்த ஆட்சி செய்யும் அதிகாரத்தை 5 ஆண்டுகாலம் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். யாரையும் அவசரப்பட்டு கலைக்க வேண்டும் என்றோ, கட்சியை உடைக்க வேண்டும் என்றோ, அதன் மூலம் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிற கட்சி பாஜக அல்ல. மறைமுகமாக அல்ல நேரடியாகவே, எல்லா மாநில அரசுக்கும், மத்திய அரசு வழிகாட்டியாக இருக்கிறது.
ஜனநாயகம் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ள சிலர் இந்த சூழலில் யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர், அபத்தமான பொய்யான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடிக்கு எதிராக சொல்லி வருகிறார்.
பாஜக வாஜ்பாய் காலத்தில் இருந்து கடைபிடித்த நடைமுறை என்னவென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டால் அடிப்படையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று அர்த்தம்.
அந்த நிலை வரும்போது யார் முதல்வராக இருக்கிறாறோ அவரே ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவருக்கு கீழே இருக்கிற அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது மரபு.
தமிழக முதல்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. விசாரணையே துவங்காத நிலையில், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது முறையான செயல் அல்ல என்றார்.