பெரம்பலூர் : நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விழுக்காடு சார்பாக தலைமையாசிரியர்களுடானான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 85 அரசு, ஆதி திராவிட நல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கள் பள்ளி பெற்ற தேர்ச்சி விழுக்காடுகள் குறித்து ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களிடமும் தனித் தனியாக மாவட்ட ஆட்சிப்பணியாளர் விளக்கங்களை கேட்டறிந்தார்.
தேர்ச்சி விழுக்காடு குறைந்து காணப்பட்டதற்கான காரணம் குறித்தும், இத்தேச்சி விழுக்காட்டினை வரக்கூடிய கல்வி ஆண்டில் உயர்த்துவதற்கு குறித்து மாவட்ட ஆட்சிப் பணியாளர், பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி கலந்துரையாடினார்.
வரும் 2017-2018-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் 27 வகையான செயல்பாடுகள் குறித்து வகுப்பறைக் கையேட்டில் உள்ளதை பள்ளிகளில் கால அட்டவணையின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் இக்கூட்டத்தின் வாயிலாக தலைமை ஆசிரியர்களை கேடடுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி, மாவட்டக் கல்வி அலுவலர் அம்பிகாபதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.