Larry theft stopped by armed pooja in Namakkal: Police caught by SMS information
நாமக்கல்லில் லாரியை திருடி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும்ரூ. 15 லட்சம் மதிப்பிலான லாரி மீட்கப்பட்டது.
நாமக்கல் சந்தைபேட்டைபுதூரைச் சேர்ந்தவர் பழனிவேல் (52). இவர் தனது லாரியை முதலைப்பட்டியில் உள்ள பட்டறையின் எதிரில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி இருந்தார்.
கடந்த 18ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு லாரியை பார்க்க சென்றபோது லாரி திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நாமக்கல் நல்லிப்பாளையம் போலீசல் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை திருடிய நபரை தேடி வந்தனர்.
இதனிடையே பழனிவேலின் செல்போனிற்கு எண்ணிற்கு அவரது லாரி சேலம் மாவட்டம் தலைவாசல் சுங்கச் சாவடியை கடந்ததற்கான எஸ்எம்எஸ் வந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் ஆத்தூர்-சின்னசேலம் ரோட்டில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருட்டு போன லாரி அந்த வழியாக வந்தது. உடனடியாக அந்த லாரியை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாமக்கல் பெரிய பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (56) லாரியை திருடி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.
லாரி டிரைவரான அவர் லாரியை திருடி ராசிபுரம் மற்றும் மங்களபுரத்தைச் சேர்ந்த இடைத்தரகர்களான கண்ணன், ராமு மற்றும் ராஜ்குமார் ஆகியோரை வைத்து லாரியை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டிரைவர் செல்வராஜை கைது செய்த போலீசார் திருட்டு போன ரூ. 15 லட்சம் மதிப்பிலான லாரியை மீட்டனர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு திருட்டு போன லாரியை மீட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பாராட்டினார்.
கைதான செல்வராஜ் கடந்த 2008ம் ஆண்டு நாமக்கல்லில் லாரி டயரை திருடி விற்ற வழக்கில் சிறை சென்றவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.