Minister Sivashankar announces plans to grind 2 lakh metric tonnes of sugarcane at Perambalur Sugar Mill!
பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலையின் அரவை பணியை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்து, சர்க்கரை ஆலையை பார்வையிட்டனர். பெரம்பலூர் எம்.பி அருண்நேரு , பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அரசு பொதுத்துறை நிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலை தமிழ்நாடு அரசின் சர்க்கரை கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரால் 1975 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1978 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலைரால், 2010 ஆம் ஆண்டு எறையூர் சர்க்கரை ஆலையில் 18 மெகாவாட் இணைமின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு முதல் இணைமின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மாதமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான அரவை பருவம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை வரும் 2025 ஆண்டு மார்ச்8 வரை நடைபெற உள்ளது. 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கரும்புகளை அரவை செய்திடவும், ஆலை சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75% அளவிற்கு இலக்கை எய்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தினசரி முழு அளவை திறனுடன் அரவை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் ஊக்கத்தொகையாக 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.192.50ம், 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ.195ம், 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.195ம் 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.215ம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரவைப் பருவத்தில் அரவை செய்த கரும்பிற்காக ரூ.71 கோடி கிரயத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 2.39 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரவைக்காக 3,380 பயனாளிகளுக்கு ரூ.5.13 கோடி கரும்பு அரவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவையில் கூடுதல் இலக்கு எட்டப்பட்டு விவசாயிகளுக்கு அரவைத்தொகை வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் பரப்பு விரிவாக்கம் செய்திட, சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளபடி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான நலத்திட்டங்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார். அதனை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீஸ்வரன், மதியழகன், ராஜேந்திரன், பெரியம்மாபாளையம் ரமேஷ், வேப்பூர் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி வைஸ்- சேர்மன் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ்ணன், எறையூர் ஊராட்சித் தலைவர் ஜெயந்தி ராம்குமார் மற்றும் விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.