NADA storm in the Bay of Bengal: Dec., 2 passes on the shore near Cuddalore
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் புயலாக உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் சின்னத்தால் டிசம்பர் 2ம் தேதி முதல் அனேக இடங்களில் பெரும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். இந்த புயலுக்கு நாடா (NADA) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நாளை முதல் மழை பெய்யத் தொடங்கும். படிப்படியாக அதகிரிக்கும். புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை உருவான பிறகு உருவாகியுள்ள 35வது புயல் இது.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத் தாழ்வு நிலையானது தொடர்ந்து வலுப்பெற்று இன்று காலை 8.30 மணியளவில் புயல் சின்னமாக மாறியது. இது தென்மேற்கு வங்கக் கடலில் புதுச்சேரிக்கு 75 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 830 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னம் 2ம் தேதி அதிகாலை வேதாரண்யம் – புதுச்சேரி இடையே கடலூருக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கன மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் துவங்கி உட்புற மாவட்டங்களுக்கு மழை நகரும். இந்த புயல் சின்னம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 45முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று தெரிவித்தார்.