New for public use, 2500 buses; Transport Minister Sivasankar informed!

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2000 டீசல் பேருந்துகளும், 500 எலக்ரிக்கல் பேருந்துகளும் புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகளின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கல்லுாரிக்கு பேருந்து சேவையினை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துங்கபுரம் ஊராட்சியில் அரியலூர் முதல் மருதையான் கோயில், துங்கபுரம், வயலப்பாடி, ஓலைப்பாடி வழியாக வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரையிலான புதிய வழித்தடம் மற்றும் கூடுதல் பேருந்து வசதியினையும் மற்றும் அகரம்சீகூர் முதல் வயலூர், கீழப்பெரம்பலூர், வீரமநல்லூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர் வழியாக குன்னம் வரையிலான புதிய வழித்தட பேருந்து வசதியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை, கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் கல்லூரி மாணவிகளுடன் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது தங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றித்தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், போக்குவரத்துறை அமைச்சருக்கும் மாணவிகள் நன்றி தெரிவித்தனர். அமைச்சர் சிவசங்கருக்கு பொன்னாடை அணிவித்தனர். பின்னர் மாணவிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாணவிகளுடன் செல்பி போட்டோ எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், திமுக மாவட்டட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக மகளிருக்கான திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வேப்பூரில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கை கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்பதாகும். இன்று அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை ரூ.48,500 கோடி நஷ்டத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இயங்கி வருகின்றது. மனித சமுதாயத்தின் முன்னேற்றமே நகர்வை நோக்கியதாகத்தான் உள்ளது. அப்படி நகர்வை நோக்கிய பயணத்திற்கு பொது போக்குவரத்து இன்றியமையாததாகிறது. ஒன்றிய அரசு அன்றாடம் டீசல் விலையினை உயர்த்தி வரும் சூழலில், மக்களுக்கு வழங்கப்படும் சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் போக்குவரத்துத்துறை இயங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களில் பேருந்து பயணச்சீட்டு விலை உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால், நமது தமிழ்நாடு மாநில அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் அண்டை மாநிலங்களுக்குள் செல்லும்போது அவர்கள் நிர்ணயித்துள்ள பயணச்சீட்டிற்கான தொகையினை பெறவேண்டியுள்ள சூழல் நிலவுகின்றது. நமது மாநிலத்தில் போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் எந்த அறிவுரையும் வழங்க வில்லை. எனவே, பேருந்து பயண கட்டணம் உயர்த்தப்படாது.

மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற மகத்தான திட்டத்தின் மூலம் இதுவரை 109கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதற்கான செலவுத்தொகையான ரூ.1600கோடி நிதியினை தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் சார்பில் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் உள்ள மிகவும் பழமையான பேருந்துகளை மாற்றும் வகையில் 2000 டீசல் பேருந்துகளும், 500 எலக்ரிக்கல் பேருந்துகளும் வாங்குவதற்கு ஜெர்மானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 7 மாதங்களுக்குள் இந்த புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து கழக பணியாளர்கள்,வேப்பூர் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!