Perambalur: 10 Lakh Loot after Hijacking Jeep: 6-member gang busted; Police investigation!
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஜுப்பை, ஸ்கூட்டியில் வந்த 6 பேர் வழிமறித்து, தீபாவளி பட்டாசு வியாபாரத்திற்காக பட்டாசு கொள்முதல் செய்ய சென்றவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மொரப்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னப்ப கவுண்டர் மகன் யுவராஜ்(41). இவர் கேரளாவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நடத்தி வரும் விஎஸ்ஏ.,ஷிப்பிங் கம்பெனியில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வாங்குவதற்காக நேற்றிரவு 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மகேந்திரா ஜீப்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிவகாசி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
ஜீப், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை டோல்பூத்தை கடந்து சென்ற போது, தண்ணீர் பந்தல் பகுதியில் இடது புறம் உள்ள மண் பாதையில் இருந்து திடீரென சாலையின் குறுக்கே ஸ்கூட்டியில் இரண்டு நபர்கள் வீட்டில் மோதுவது போல் வந்ததால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் சட்டென ஜீப்பை நிறுத்தி கீழே இறங்கி ஏன் விபத்து ஏற்படுத்துவது போல் வாகனத்தை ஓட்டி வருகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.
இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் யுவராஜுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு திடீரென வந்த 6 பேர் கொண்ட கும்பல் யுவராஜை சரமாரியாக தாக்கியதோடு தலை, நெஞ்சு, கை, கால் பகுதியில் வெட்டிவிட்டு, ஜீப்பில் இருந்த 10 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று தலைமறைவானது.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் நிலைகுலைந்த யுவராஜ் சம்பவ இடத்திலிருந்து ரத்த காயங்களுடன் அப்பகுதியில் இருந்த ஒரு இண்டியன் ஆயில் பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்ததை தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவராஜ் வெட்டுக் காயங்களுக்கு தையல் போடப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தாக்குதலுக்குள்ளான யுவராஜிடம் விசாரணை மேற்கொண்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் யுவராஜ் கொண்டு வந்த 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயில் 10 லட்ச ரூபாய் நோட்டுகளாக இருந்ததால் அவற்றை மட்டும் வழிப்பறி செய்த கும்பல் சாக்கு பைகளில் ஐந்து ரூபாய் நாணயமாக இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயையும், இரண்டு ரூபாய் நாணயமாக இருந்ததால், 30 ஆயிரம் ரூபாயையும் தூக்கிச் செல்ல முடியாததால் ஜீப்பிலேயே விட்டு விட்டுச் சென்றனர்.
பட்டாசு வாங்க சென்ற நபரிடம் நள்ளிரவு நேரத்தில் 10 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.