Perambalur: 15 new medical buildings are being constructed at a cost of Rs. 8.10 crore; Minister Subramanian informed!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (05.01.2025) திறந்து வைத்து பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் புதிதாக ரூ. 50 லட்சம் மதிப்பில், கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் இது போன்ற பொது சுகாதார அலகு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 150 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார அலகு கட்டிடங்களில் காசநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற 67 வகையான மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்கும் சேர்த்து, தமிழகத்தில் காலியாக 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் எம்ஆர்பி ( Medical Services Recruitment Board) என்ற அமைப்பின் மூலம் இன்று தேர்வு நடத்திக் கொண்டு உள்ளனர். இன்று காலை 9.15 முதல் மதியம் 12:15 மணி வரை நடைபெறும் இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 156 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 23,917 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிவுற்று மிக விரைவில் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பொற்கரங்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டின் மருத்துவத் துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 2,553 மருத்துவர்கள் காண பணியிடங்கள் நிரப்பப்படுவது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 86 மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இந்த 86 பணியிடங்களில் 54 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மீதமுள்ள 32 பணியிடங்களும் தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்படவுள்ள 2,553 பணியிடங்களின் போது பெரம்பலூர் மாவட்டத்திற்கான பணியிடங்களும் நிரப்பப்பட்டு பூர்த்தி செய்யப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்புலியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் முடிவுற்றது. மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரால் வழிகாட்டுதலின்படி மருத்துவத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது. “இதயம் காப்போம்” என்ற திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் 27.06.2023 அன்று கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் 8,713 துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் 10,999 மருத்துவமனைகளிலும் லோடிங் டோஸ் என்று அழைக்கப்படும் இருதய பாதுகாப்பு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு, இதன்மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 13,673 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 229 நபர்கள் இதயம் காக்கும் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். குறிப்பாக கொளக்காநத்தம் மருத்துவமனையில் 23 நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் 05.08.2021 அன்று மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்து ஒரு கோடி பயனாளிகளுக்கு இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு கோடியே ஒன்னாவது பயனாளிக்கு திருச்சி மாவட்டத்தில் மருந்து பெட்டகத்தினையும், ஈரோடு மாவட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கும் மருந்து பெட்டகத்தினை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்தத் திட்டம் தொடங்கும் போது அவரது இலக்கு ஒரு கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அது இரண்டு கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதற்காக ஐநா சபை இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை தொற்றுநோய்கள் பரவாமல் மிகச் சிறப்பாக செயல்படுவதாக தேர்ந்தெடுத்து அதற்காக ஒரு விருதினையும் வழங்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், மருவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், லெப்பைக்குடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அகரம் சீகூர் துணை சுகாதார நிலையம், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு, செஞ்சேரி துணை சுகாதார நிலையம், பசும்பலூர் ஆரம்ப சுகாதார நிலையம், வாலிகண்டபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15 புதிய மருத்துவ கட்டிடங்கள் ரூ.8.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து தரப்பு மக்களும் தமிழக அரசின் மருத்துவ சேவைகளை பயன்படுத்தும் வகையில் கட்டண படுக்கை பிரிவு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 5 புதிய துணை சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு இடம் கண்டறியப்பட்டு சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்.
தமிழகத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரால் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி பணிகள் ஆரம்பிப்பதற்கும், பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பிரிவு கட்டணம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் அனுமதி கோருவதற்கு நேரில் சந்திப்பதற்காக இந்த மாதம் கடைசியில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் அவர்களிடம் அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
மேலும், சீனாவில் இருந்து பரவக்கூடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இது குறித்து மத்திய அரசும் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. சீனாவில் பரவி வரும் வைரஸ் நோய் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தமிழக அரசு தயார் நிலை உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 1 பயனாளிக்கு பிறப்புச் சான்றிதழையும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், ஆலத்தூர் யூனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட திமுக செயலாளர் வீ.ஜெகதீசன், வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன், மாவட்ட இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் வ.சுப்ரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.