Perambalur: 165th anniversary of St. Susaiyappar Church in Palayam! Procession of Electrically Illuminated Chariots!!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் 165-வது ஆண்டுப் பெருவிழாவையொட்டி மின் அலங்கார தேர் மற்றும் சப்பர பவனி வெகுவிமரிசையாக நடந்தது. இந்த தேவாலயத்தின் தேர்த் திருவிழா கடந்த 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி பாளையம் புனித சூசையப்பர் தேவாலய வளாகத்தில் உள்ள பிரமாண்ட கொடிமரத்தில் பங்கு குரு ரெஜீஸ் தலைமையில், மண்ணின் மைந்தர் டேவிட் முன்னிலையில், பாபநாசம் பங்குகுரு மரிய பிரான்சிஸ் புனித சூசையப்பர் கொடியை மந்தரித்து, புனிதப் படுத்தி, கொடிமரத்தில் ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தினமும் மாலையில் பல்வேறு அன்பியம் குழுவினரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பல்வேறு வெளியூர் பங்கு குருக்கள், மண்ணின் மைந்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் மறை உரையுடன் சிறப்பு திருப்பலி நடத்தினர். பிறகு 8ஆம்தேதி இரவு அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.
லால்குடி பங்கு குரு சேவியர் சிறப்பு திருப்பலி நடத்தி சப்பர பவனியை மந்தரித்துத் தொடங்கி வைத்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் தேதி இரவு ஆடம்பர தேர் மற்றும் சப்பர பவனி நடைபெற்றது. முன்னதாக கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி தலைமையில், பாளையம் பங்குகுரு ரெஜீஸ் உள்ளிட்ட பங்கு குருக்கள் முன்னிலையில் உறுதிப் பூசுதல் நிகழ்ச்சியுடன் சிறப்பு பாடல் திருப்பலி நடை பெற்றது.
நேற்று 10ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா திருப்பலியும், மாலையில் சாதாரண சப்பர பவனியும் முடிந்து, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் மண்ணின் மைந்தர்களான குருக்கள், அருட்சகோதரிகள், கிராம காரியஸ்தர்கள், அன்பியம் குழுவினர், இளைஞர் மன்றத்தினர், பாளையம் கிராம கிறிஸ்தவப் பொது மக்கள் மட்டுமின்றி பெரம்பலூர், குரும்பலூர், ரெங்கநாதபுரம், சத்திரமனை, புதுநடுவலூர், வேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இறை மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497