Perambalur: 21st Livestock Census Commencement; Collector Information!
இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்புப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இதுவரை 20 முறை கால்நடை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது. 21-வது கால்நடை கணக்கெடுப்புப்பணி நாடு முழுவதும் 25.10.2024 முதல் 28.02.2025 வரை நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பணி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 25.10.2024 அன்று துவங்கப்படவுள்ளது.
கால்நடை கணக்கெடுப்புப் பணிகள் அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நடைபெறும். கால்நடைகள் உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், வழிபாட்டு தலங்கள், விலங்குகள் நலமையங்கள் மற்றும் பசுமடங்களில் கால்நடைகளின் விபரங்கள் சேகரிக்கப்படும் .
பெரம்பலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணிக்காக வருவாய் கிராமங்களுக்கு 62 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 16 மேற்பார்வையாளர்கள் மூலமாகவும், நகர்ப்புற வார்டுகளில் 8 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் கணக்கெடுப்புப்பணி நடைபெறவுள்ளது.
கால்நடை கணக்கெடுப்பு என்பது கால்நடை பராமரிப்பிற்கான எதிர்கால திட்டங்களை செயல்படுத்திடவும், கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவன உற்பத்தியை பெருக்கிடவும், நோய் தடுப்பூசிகள் மற்றும் கால்நடை மருந்துகள் உற்பத்தி செய்யவும், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணெய், நெய் மற்றும் ஆடு, கோழி இறைச்சிகள், முட்டை போன்றவை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய துல்லியமான கால்நடை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாகும். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் கால்நடை இழப்பிற்கு உரிய நிவாரணம் அளிக்கவும், கால்நடைகளின் கொட்டகை வசதி, காப்பீட்டு வசதி செய்து தர கால்நடை கணக்கெடுப்பு முக்கியமானதாகும்.
கால்நடை கணக்கெடுப்பிற்கு பெயர் மற்றும் முகவரி, வீட்டுக்கதவு எண், ஆதார் எண், தொலைபேசி எண், முக்கிய தொழில் விபரங்கள், கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் வாரியாக விபரங்கள் சேகரிக்கப்படும். எனவே, கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீடுகளுக்கு விபரம் சேகரிக்க வரும்பொழுது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி உரிய விபரங்களை அளித்து கணக்கெடுப்புப்பணி துல்லியமாக நடைபெறவும், எதிர்காலத்தில் கால்நடை வளம், மனிதவளம், உணவு பாதுகாப்பு மற்றும் திட்டமிடலுக்கும் நமது மாவட்டத்தில் தேவையான தரவுகளை அளித்திடுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.