Perambalur: 2533 candidates participated in the interview for 31 ration shop salesman posts; Collector inspects!
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (இருபாலர்), கூட்டுறவுத் துறையின் சார்பில், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் நேர்முகத் தேர்வு மையத்தினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 31 நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் (Salesman) பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 09.10.2024 அன்று முதல் 07.11.2024 அன்று வரை விண்ணப்பங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டதில் மொத்தம் 2,594 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 61 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியுடைய 2,533 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்விற்கான நாள் மற்றும் நேரம் உள்ளடக்கிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று முதல் 29.11.2024 வரை நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகின்றது. இத்தேர்வு முற்பகல் 250 விண்ணப்பதாரர்கள் மற்றும் பிற்பகல் 250 விண்ணப்பதாரர்கள் என நாள் ஒன்றுக்கு 500 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையத்தைப் பார்வையிட்ட கலெக்டர் தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும், நேர்முகத் தேர்வில் எந்தெந்த அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்படுகிறது எதன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்தும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் கேட்டறிந்தார்.
கூட்டுறவு சார்பதிவாளர்கள் சங்க செயலாளர்கள் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.