Perambalur: A consultation meeting to turn Aladhur and Veppanthattai into prosperous areas!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநில திட்டக்குழு சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் லால் ரின்டகி பச்சாவ் தலைமையில் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பின்தங்கிய வட்டாரங்களை கண்டறிந்து, அவ்வட்டரங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டங்கள் செயல்படுத்தி வளமிகு வட்டாரமாக மாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில், மாநில திட்டக்குழு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், திட்டக்குழுவால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் வளமிகு வட்டாரங்களாக மாற்றிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த வட்டாரங்களில், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர்திட்டம், கல்வி, வேளாண்மை உள்ளடக்கிய 24 துறைகளில் திட்டங்களின் குறிக்கோள்கள் முழுமையாக அடைவதற்கான குறியீடுகள் குறித்து செயல்திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான தொடர்புடைய அலுவலர்களுடனான கலந்தாய்வு நடைபெற்றது.
இவ்வட்டாரங்களில் வாழும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல், குழந்தைகளின் சரிவிகித ஊட்டச்சத்துகள் குறித்து கணக்கீடு செய்து ஊட்டச்சத்து உணவு வழங்கிடுதல், பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், சுகாதார பணி மேற்கொள்ளுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்மந்தப்பட்டதுறை அலுவலர்கள் உரிய ஆய்வு செய்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த 2 வட்டாரங்களுக்கும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அதற்கான நிதியினை பெற்றுத்தர திட்டக்குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில், சப்-கலெக்டர் சு.கோகுல், மாவட்ட திட்டக்குழு அலுவலர் / மாவட்ட ஊராட்சி செயலர் நா.சங்கீதா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மை நிறுவன பேராசிரியர்கள் மகாலிங்கம், சுப்ரமணியன், மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப் குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.