Perambalur: A long-standing enmity and subsequent clash between TVK and DMK functionaries—stemming from a dispute over government contract bids—has led to a complaint being filed with the Superintendent of Police (SP) by the wife of a TVK functionary, alleging that individuals entered their home and issued death threats.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளத்தூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மனைவி மகாலட்சுமி (24). இவர் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறேன். கொளத்தூர் கிராமம் மேற்கு தெருவில் வசிக்கும், தங்கவேல் மகன் சிவசங்கருக்கும், எனது கணவர் சுந்தர்ராஜனுக்கும் இடையே அரசு ஒப்பந்தம் கோரியது தொடர்பாக கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனிடையே கடந்த 23.09.2026 ஆம் தேதி வழக்கம் போல் ஏற்பட்ட தகராறில், எனது கணவர் சுந்தர்ராஜனை,
சிவசங்கரும் அவரது ஆதரவாளரான சிவசூரியன் என்பவரும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்கள். அந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த எனது கணவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உன் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 223/2026U/s 296(b), 115(2), 351(3) of BNS ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 26.09.2026ஆம் தேதி இரவு 09.00 மணி அளவில் நான் வீட்டின் படுக்கையறையில் தனியாக இருந்த போது, மேற்படி சிவசங்கர் எனது வீட்டிற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்து, கழுத்தைப் பிடித்து நெறித்து, உனது வீட்டுக்காரனை உடனே வர சொல்லுடி, என வாய்க்கு வந்தபடி ஆபாசமாக மனம் நோகும்படி திட்டி பேசினார். இதனால் பயந்து போய் நான் சத்தம் போட்டதால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து சமாதானம் செய்து என்னை சிவசங்கரிடமிருந்து காப்பாற்றினர். இது தொடர்பாக நான் மீண்டும் மருவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 228/2026ல் 329(3), 296(b), 115(2), 351(2) மற்றும் 74 BNS ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 16.10.2026 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் மேற்படி சிவசங்கர், பெரம்பலூரைச் சேர்ந்த 5 சமூக விரோதிகளுடன் எனது வீட்டிற்கு வந்து என்னை தகாத வார்த்தையால் திட்டி, ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்து எங்களுக்கு சொந்தமான TN 46 AK 0704 என்ற பதிவில் கொண்ட டாடா சியரா வாகனத்தின் மீது கற்களை தூக்கிப்போட்டு சேதப்படுத்தி விட்டனர்.

இது தொடர்பாகவும் நான் மருவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 244/2026ல் 324(4), 296(b), 351(3) of BNS ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் உள்ளிட்ட சமூக விரோதிகள் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை எனது கணவர் உள்ளிட்ட என் மீது தாக்குதலில் ஈடுபட்டதோடு, நாகூசும் வார்த்தையால் பேசி, எனக்கும் எனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வரும் தங்கவேல் மகன் சிவசங்கர் போலீஸிடம் சிக்காமல் தப்பித்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

இதனால் எங்களுக்கும் எங்களது குடும்பத்தாருக்கும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என பெரும் மன உளைச்சலும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, மேற்கண்ட சிவசங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி லலித் குமார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தவெக நிர்வாகி உள்ளிட்ட அவரது மனைவி மீது, தனது ஆதரவாளர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள டி.ஆர்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் ஒரே சமூகத்தை சேர்ந்த உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!