Perambalur: A young man riding a bike met with an accident and died on the spot!
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு, பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (32). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் நேற்றிரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு, வேலை முடிந்த பின்னர் தனது பைக்கில் திருமாந்துறை கிராமத்திலிருந்து பென்னக்கோணம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளார். சிவக்குமார் ஓட்டி சென்ற பைக் லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் சென்ற போது, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து, படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். இதற்கிடையே விபத்தில் சிவக்குமார் உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவக்குமாரின் சடலத்தை கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிட செய்தனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தால் ஜமாலியா நகர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிவக்குமாருக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று அவரது மனைவி கௌசல்யா(30) தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த பகுதியில் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில், சிவக்குமார் அதிவேகமாக தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்வதும், எதிரே வந்த வாகனத்தை கடந்து செல்ல முடியாமல் அதிர்ச்சிக்குள்ளாகி நிலை தடுமாறி சாலையில் நடந்து சென்றோர் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரை விட்டதும், சிவக்குமார் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகர் பகுதியை சேர்ந்த பகதூர் அலி(59), என்ற முதியவர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.