Perambalur: Accident-free Tamilnadu: awareness about helmets Collector, SP participated!
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில், வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகள் இடையே வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டி வந்த நபர்களுக்கு மரக்கன்றுகளையும் இனிப்புகளையும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் , போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா ஆகியோர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. வாகன ஓட்டுநர்கள் தூக்கமின்மை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழக அரசு இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், சாலை விதிகளைப் பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்கப்படுத்திட 26.09.2024 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை கலெக்டர், போலீஸ் எஸ்.பி ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.
அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், தலைக்கவசத்தினையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இனிவரும் காலங்களில் மீண்டும் இதுபோன்று தலைக்கவசம் அணியாமல் சென்றால் போக்குவரத்து விதியின்படி அபராதம் விதிக்கப்படும் என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. பிரபாகரன், பிரேக் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, போலீஸ் டி.எஸ்.பி காமராஜ், தாசில்தார் சரவணன், போக்குவரத்துத்துறை காவல் துறையினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.