Perambalur: After 15 years, Naranamangalam Village Kumbabhishekam: Mugurtha Kal Planting Ceremony Begins Today!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு மந்தைவெளி வினாயகர், அருள்மிகு நடுத்தெரு வினாயகர், அருள்மிகு நல்லநாயகி உடனுறை அருள்மிகு நந்திகேசுவரர், தேவி,ஸ்ரீபூமாதேவி உடனுறை அருள்மிகு வரதராஜப்பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களான அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு நல்லசெல்லியம்மன், அருள்மிகு மல்லபிள்ளையார், அருள்மிகு செங்காமுனியார், அருள்மிகு முத்துவீரசாமி, அருள்மிகு கெங்கையம்மன், அருள்மிகுஅய்யனார், அருள்மிகு மருதையான், அருள்மிகு பெரியாண்டவர் ஆகிய கோவில்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு, நாரணமங்கலம் கிராம மக்களால் புனரமைக்கப்பட்டு, விமானங்கள் சீர்திருத்தம் செய்யும் பணிகள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடியும் நிலையில் உள்ளது. வருகிற 21.10.2024, ஐப்பசி மாதம் 04-ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள், சிவகாமச்செல்வர் சுத்தரத்தின அய்யர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள கோவில்களில் கணபதி பூஜை, புன்யாஹாவாசனம் மற்றும் வாஸ்து பூஜைகள் செய்து முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. முன்னதாக, கோவிலில் பூஜைகள் செய்யப்பட்ட முகூர்த்த கால்களை நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள வீதிகள் வழியாக பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நாரணமங்கலம் கிராம தர்மகர்த்தா, கரைக்காரர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.