Perambalur: Ambedkar statue damaged, VCK road blockade; Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் சிமெண்டால் செய்யப்பட்ட அம்பேத்கார் சிலை உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த பொழுது சிலையின் ஒரு விரல் பகுதி ஒடிந்த நிலையில் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அம்பேத்கார் சிலையில் உள்ள விரலை யாரோ விஷமிகள் சேதப்படுத்தி உள்ளனர் என்றும்,
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேப்பந்தட்டை மேற்கு விசிக ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் தலைமையில் வெங்கலம் அம்பேத்கார் சிலை முன்பு கிருஷ்ணாபுரம்- அரும்பாவூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சேதமடைந்த அம்பேத்கார் சிலை விரலை சரி செய்வதாகவும், அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அம்பேத்கார் சிலையில் விரலை சேதப்படுத்தியது யார் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு பரவியதால் அங்கு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அம்பேத்கார் சிலை சேதப்படுத்திய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், பெரம்பலூர் விசிக மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல் தலைமையில் போலீஸ் டி.எஸ்.பி ஆரோக்கியராஜுடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.