Perambalur: Anti-corruption special unit launched in the district police!

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில், காவல்துறையில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்பிரிவினை பற்றி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்தாவது:

காவல்துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் அல்லது சட்டவிரோதமாக பணம் கேட்பது, லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்துவது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

பெரம்பலூர் பொதுமக்களிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்தினாலோ, பொதுமக்கள் அதுகுறித்த தகவல்களை 8903631122 என்ற எண்ணிற்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் போது, சம்பவம் நடைபெற்ற இடம், சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் விவரம், லஞ்சம் கேட்கப்பட்ட காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான பிற தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கும் வகையில், தகவல் அளிப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பெறப்படும் தகவல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காவல்துறையில் நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. காவல்துறையினர் தங்களது பணியைச் செய்வதற்காக எந்தவிதமான லஞ்சத்தையும் கேட்கக் கூடாது என்பதையும், லஞ்சம் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தயக்கமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதையும் இந்த முயற்சி வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!