“தேகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வே புத்தகத் திருவிழாக்கள்” – தேசிய ஊரக சுகாதாரத் திட்ட இயக்குநர் தரேஸ் அஹமது பேச்சு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா – 2017 ன் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தேசிய ஊரக சுகாதாரத்திட்ட இயக்குநர் தரேஸ் அஹமது கலந்துகொண்டு பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பேராதரவோடு நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். புத்தகங்கள் நமது வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் ஆசான்கள். நம் உடலில் உள்ள மன அழுத்தங்கள், சங்கடங்கள், கவலைகள், மனஅழுக்குகளை சுத்தம் செய்யும் நிகழ்வாகத்தான் நான் புத்தகத்திருவிழாக்களைப்பார;க்கிறேன். அந்த அளவுக்கு புத்தக வாசிப்பு நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்தப்புத்தகத் திருவிழாவை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார;.

முன்னதாக “மனதில் நின்ற மனிதர்கள்” என்ற தலைப்பில் சுகி.சிவமும், சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் “மொழியும் நம் வழியும்” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மற்றும் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் “எல்லோரும் வல்லவரே” என்ற தலைப்பிலும் பேசினார்கள். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் மாணவ-மாணவிகள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

29.1.2017 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் 3ஆம் நாள் நிகழச்சிகள் ரோவர் கல்வி நிறுவனங்களின் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின.

இந்நிகழ்ச்சியில் ரோவர் கல்வி நிறுவனங்களில் தாளாளர் வரதராஜன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் “பச்சையை காக்க” என்ற தலைப்பில் எழுத்தாளர் வா.மணிகண்டனும், “வாழ்வியலும், வாசிப்பும்” என்ற தலைப்பில் கவிஞர்.ஜோ.அருள்பிரகாஷீம் உரையாற்றினார்கள்.

பின்னர் “ஒரு சொல்” என்ற தலைப்பில் கவிஞர் சுமதிஸ்ரீ பேசியதாவது:

தமிழர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு சொல்லிற்கும் ஆழ்ந்த காரணங்கள் இருக்கின்றன. காரணமில்லாமல் எந்தவொரு சொல்லையும், வார்த்தையையும் தமிழர்கள் பயன்படுத்தவில்லை. உதாரணமாக மறைந்திருக்கும் பொருளை குறிக்கவோ அல்லது மறைந்துள்ளது என்பதை குறிக்கவோ தமிழில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான பெயர்ச்சொல்கள் ‘வே’ என்ற எழுத்தில்தான் தொடங்கும். வேர் – மண்ணுக்குள் மறைத்திருக்கும், வேஷம் – உண்மைத் தோற்றத்தை மறைத்து பொய்யான தோற்றத்தை காட்டும், வேட்டி – மானத்தை மறைக்கும், இப்படி தான் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் கருத்தாழமிக்க செய்திகள் அடங்கியிருக்கும்.

தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லின் வீரியமும் அளப்பரியது. புத்தகங்கள் படிக்கும்போது பல்வேறு சொற்கள் நமது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும். புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் நம்மை நல்வழிப்படுத்தும். எனவே, இதுபோன்ற புத்தகத்திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் “சில நேரங்களில் சில புத்தகங்கள்” என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசியதாவது:

ஒவ்வெரு புத்தகமும் மனிதர்களை நல்வழியில் மடைமாற்றும் சக்திபெற்றவை. நாம் படிக்கும் அனைத்து புத்தகங்களும் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒருசில புத்தகங்கள் நம்மில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் வல்லமைபெற்றவையாக அமையும். புத்தகங்களை நாம் மேலிலிருந்து கீழாக படிக்கப்படிக்க, புத்தகங்கள் நம்மை வாழ்க்கையில் கீழிருந்து மேலாக உயர்த்திவிடும்.

பள்ளிக்கூடங்களுக்குச் செல்பவர்கள் புத்தகங்களோடு செல்வார்கள், புத்தகங்களைப் படித்து வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பலரும் படிக்கும் செய்திகளாக புத்தகங்களுக்குள் உள்ளார்கள். வாசிப்பு என்பது அத்தனை சக்தி மிக்கது. வாசிப்பு மட்டுமே நம்மை வாழ்வில் உயர்த்தும். புத்தகங்களை படியுங்கள் புத்தகத் திருவிழாக்களை கொண்டாடுங்கள் என்றார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!