Perambalur: Bus carrying devotees crashes into wall of house, one killed!
பெரம்பலூர் அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து நேற்று இரவு ஒரு டூரிஸ்ட்பஸ்ஸில் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த பஸ்ஸை சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (42) என்பவர் ஓட்டினார்.
நெய்குப்பையில் இருந்து வி.களத்தூரை நோக்கி பக்தர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட பஸ் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற போது சாலையின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் திடீரென புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி ( 40) என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில், தூங்கிக் கொண்டிருந்த கணவர் சன்னாசி, மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
உயிரிழந்த லட்சுமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தளவாய்பட்டி கிராமம் ஆகும். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக நெய்குப்பை கிராமத்தில் தற்போது பஸ் புகுந்து இடிந்த வீட்டில் தங்கி குத்தகைக்கு நிலத்தை எடுத்து பயிர் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சுற்றுலா பஸ் வீட்டின் சுவரில் மோதுவதற்கு முன்பாக அருகில் நின்று கொண்டிருந்த தனியார் மினி பஸ் மீதும் மோதி விட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது பஸ்ஸில் பயணம் செய்த நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த ஆதிபராசக்தி பக்தர்கள் 10-கும் மேற்பட்டவர்களும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விகாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.