Perambalur: Bus collides with truck ahead; 8 people were injured!
பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை நாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(46) என்பவர் ஓட்டி வந்தார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே உள்ள முருக்கன்குடி பிரிவுபாதை இன்று மதியம் பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது, கல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று முன்னால், சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால், பின்னால் வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வராணி (27), செல்லம்மாள்(65) ஜெயந்தி (45) காயத்ரி (19) நல்லம்மாள் (40) கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு (54), பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செந்தாமரை (18) மற்றும் பெயர் விலாசம் தெரியாது ஒருவர் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஜெயந்தியின் இடது கால் துண்டானது. படுகாயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுனர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.