Perambalur: Chance to correct name in voter list in more than one place!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் சரிபார்க்கும் பணியின் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருப்பதை (DSE – (Demographic Similar Entry) நீக்கிட ஏதுவாக வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் ஒரே மாதிரியாக உள்ள இனங்களை கணினி மூலம் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாக வாய்ப்புள்ள 58,810 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு இனம் காணப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் தற்போது அறிவிப்புகள் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.
விளம்பரம்:
இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டவாறு பிரத்யேக படிவத்தில் (படிவம் - A) அறிவிப்புகள் உரிய வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால், சம்மந்தப்பட்ட வாக்காளர்களுக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும் பணியானது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அறிவிப்பினை பெற்ற வாக்காளர்கள் படிவம் -A அறிவிப்புடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் கடிதத்தில் (Confirmation Letter) தாங்கள் தற்போது சாதாரணமாக வசிக்கும் முகவரி அல்லது தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த முகவரியில் இடம்பெற வேண்டும் என விரும்பும் முகவரியினை மட்டும் தெரிவு செய்து பேனா மையினால் தெளிவாக தெரியும்படி விரும்பும் முகவரியின் மேல்பகுதியில் அதற்குரிய
கட்டத்தில் டிக்(√) மார்க் செய்து கையொப்பம் இட வேண்டும். பின்னர் இந்த உறுதிப்படுத்தும் கடிதத்தினை (Confirmation Letter) சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / சார் ஆட்சியர் அல்லது சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மீள நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தவறாது அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பதிவு அலுவலரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவம் A அறிவிப்பு கிடைக்கப்பெற்ற வாக்காளர்கள் அனைவரும் அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அல்லது பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அறிவிப்பு கிடைக்கப்பெற்ற வாக்காளர்கள், படிவம் - A அறிவிப்புடன் இணைத்து வரப்பெற்ற உறுதிப்படுத்தும் கடிதத்தினை (Confirmation Letter) முழுமையாக மேற்குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்து மீள சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைத்து, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக வைத்திட தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.