Perambalur: Check dam at Maruthaiyar near Velamuthur at Rs 3.09 crore; The Chief Minister opened the video!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை சார்பில் பெரம்பலூர் ஒன்றியம் விளாமுத்தூர் கிராமத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தடுப்பணையை பார்வையிட்டார்.
மருதையாறு, கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். மேலும் இது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள பச்சைமலை மலையிலிருந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் பாய்ந்து, கொள்ளிடத்தில் இணைகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துத்தூர் மற்றும் வைப்பூர் கிராமங்களுக்கு அருகில் 70.40 கி.மீ தூரம் பாய்ந்தோடி கொள்ளிடத்தில் கலக்கிறது.
நீர்வளத்துறை அமைச்சர் 29.03.2023 அன்று சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை கோரிக்கையின் போது, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம் விளாமுத்தூர் கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.300.90 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை அறிவித்தார். அந்த அறிவிப்பினை தொடர்ந்து, 11.09.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 05.02.2024 அன்று புதிய தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
விளாமுத்தூர் கிராமத்திற்கு அருகே மருதையாற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதால் தடுப்பணை சுற்றியுள்ள பகுதியில் 125 கிணறுகள் நீர் மட்டம் உயர்ந்து மறைமுக ஆயக்கட்டு 665.50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும்.
விளாமுத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து குடிநீர் ஆதாரம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த தடுப்பணையால் விளாமுத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதன் மூலம் 665.50 ஏக்கர் பரப்பளவுள்ள ஆயக்கட்டு உறுதிப்படுத்தப்படும். இத்திட்டம் தற்போதுள்ள ஆயக்கட்டை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி, அருகில் உள்ள 125 கிணறுகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிலத்தடி நீரை நிரப்புகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயனாக இருக்கும்.
இந்த தடுப்பணை சுமார் 25 மீட்டர் நீளம் கொண்டதாகவும் 1.20மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணை தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதால், பருவமழை பெய்யும் போது முழுமையாக மழை நீர் சேகரிக்கப்படும். இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வை.வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் த.மருதமுத்து, பெரம்பலூர் வட்டாட்சியர் (சபாதி) சுகுணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.