Perambalur: CM project camp with people in Kunnam, Anukur: Collector receives petitions!
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தொடங்கப்பட்டு நகர்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 8 முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாமில் மொத்தம் 5,264 மனுக்கள் பெறப்பட்டு 3,893 மனுக்கள் ஏற்கப்பட்டது. அரசு விதிமுறைகளுக்கு உட்படாத 1,371 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் வாயிலாக 3,893 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் பயனை ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்திடும் நோக்கில் ஊரக பகுதிக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 11.07.2024 அன்று தொடங்கப்பட்டு 4 ஊராட்சி ஒன்றியங்களில் 31 முகாம்கள் நடத்திட திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குன்னம், சித்தளி, பேரளி, மூங்கில்பாடி மற்றும் பெரியம்மாபாளையம் ஆகிய கிராமங்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனுக்கூர் தனியார் திருமண மண்டபத்தில் தேவையூர், எறையூர், அனுக்கூர் ஆகிய கிராமங்களுக்கும் நடைபெற்று வந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீதான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
குன்னம் முகாமில் 395 மனுக்களும், அனுக்கூர் முகாமில் 309 மனுக்களும் பெறப்பட்டன. இம்முகாமுடன் சேர்த்து 30 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடந்துள்ளன.
அனுக்கூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளித்த 6 பயனாளிகளுக்கு உடனுக்குடன் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையினையும், 3 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியினையும், 6 பயனாளிகளுக்கு வருவாய்துறை தொடர்பான சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
முகாமில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அரசின் சேவைகள் தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இம்முகாமில் பதியப்படும் அனைத்து மனுக்களுக்கும் ஒரு மாதத்திற்குள் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கிராமப்புறங்களில் நடைபெறுவதால் கிராமப்புற மக்கள் வெகுவாக பயனடைந்து வருகின்றனர்.
அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி கூறியதாவது:
நான் நீண்ட காலமாக வீட்டுமனைப் பட்டா இல்லாமல் குடியிருந்து வருகிறேன். எங்களுடைய கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுவதாக அறிந்தேன். இம்முகாமில், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் பெறுவதாக தெரிவித்தனர். அதனடிப்படையில், எனக்கு வீட்டு மனைப்பட்டா வேண்டி மனு அளித்தேன். மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு இன்றே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமிருந்து, வீட்டுமனைப் பட்டாவை பெற்றேன். இந்நிகழ்வு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே என்னைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒரு உதவிகரமான முகாகும். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த அகிலா தெரிவித்ததாவது:
எனக்கு திருமணம் ஆகி மூன்றாண்டுகளாகிறது. இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டையினை பெறவில்லை. இந்த அட்டையினை பெற கிராம நிர்வாக அலுவலரிடம் படிவத்தில் கையொப்பம் வாங்கி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்றுதான் மருத்துவ காப்பீடு அட்டை பெற முடியும் என தெரிவித்ததால், என்னுடைய பணியின் காரணமாக இதற்கான முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் எங்களது கிராமத்திலேயே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு செய்தேன். 30 நிமிடத்திற்குள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையினை எனக்கு கலெக்டர் வழங்கினார்.
இம்முகாமில் பங்கேற்ற போதுதான், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை என்னால் நேரில் காண முடிந்தது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு இம்முகாம் வரப்பிரசாதமாகும். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைப்பதால் என்னைப் போன்ற ஏழை எளிய மக்களின் மனம் நிறைந்துள்ளது. என தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.