Perambalur: Collector announces school holidays late; Students, parents suffer in rain!
பெரம்பலூர் மாவட்டத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை கால தாமதமாக கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். அலட்சியமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தால் பள்ளி மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வந்து மீண்டும் தங்களது வீடுகளுக்கு நனைந்தபடியே சென்ற அவல நிலையால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். சமூக வலைத் தளங்களில் தாமத அறிவிப்பிற்கு பலரும் கலெக்டருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியிருக்கிற காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்தத் தொடர் கனமழையின் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பினை இன்று அதிகாலையே வெளியிட்டனர்.
ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி இன்று அதிகாலை முதல் தற்போது வரை வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு தொடர்ச்சியாக கனமழையும் பெய்து வருகிறது.
இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத மாவட்ட ஆட்சியர், கிரேஸ் பச்சாவ் விடுமுறை குறித்த அறிவிப்பினை காலை ஒன்பது மணிக்கு தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கருதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கிற கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை கடும் குளிரிலும் மழையில் நனைந்தபடி கல்வி நிலையங்களுக்கு வழக்கம் போல் அனுப்பியும் வைத்து விட்டனர். ஆனால், காலை சுமார் 9 மணி அளவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியதால் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவ – மாணவிகள் மீண்டும் மழையில் நனைந்தபடியே கடும் சிரமங்களுக்கிடையே தங்களது வீடுகளுக்கு நனைந்தபடியே நடந்தும், பேருந்துகளிலும் திரும்பினர். இதில் சில பேருந்துகள் வந்து செல்லும் கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு பள்ளி வந்த மாணவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி காத்திருந்தனர்.
கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கையாக தெரிவித்திருந்த அறிவிப்பினை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உரிய நேரத்தில் தகவல் தெரிவித்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை குறித்த அறிவிப்பு இது போன்ற மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தொடர்ந்து கால தாமதமாக மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மேலும், திடீரென நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்தால் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பலர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழையில் நனைந்தபடி கல்வி நிலையங்களுக்கு சென்று வந்தால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று வேதனை தெரிவிக்கும் பெற்றோர்கள் உரிய நேரத்தில் வெளியாகாத அறிவிப்பால் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் மீது பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, இதுபோன்று மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் முன்னெச்சரிக்கையோடு, உரிய நேரத்தில் தகவல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு துரிதமாக செயல்பட்டால் மட்டுமே அதனால் ஏற்படும் பலன்களையும் பெற்று பாதுகாப்புடன் பொதுமக்கள் வாழ முடியும்.
அதை விடுத்து இதுபோன்று அலட்சியமாக ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கண்ணயர்ந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், அரசின் திட்டங்களோ இது போன்ற முக்கிய அறிவிப்புகளோ பொதுமக்களை சென்றடையாது என்பதை மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும், என பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.