Perambalur: Collector inspects Kunnam Taluka Office; Instructions to provide services faster!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் அலுவலக நடைமுறைகள், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக அவ்வப்போது கலெக்டர் ஆய்வு செய்வது வழக்கம். அதனடிப்படையில் குன்னம் தாலுகா ஆபீசில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை பிரிவுகளை வட்ட வழங்கல் பிரிவு, நில அளவைப் பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவு உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள் ஆகியவை தொடர்பாக தொடர்புடைய அலுவலர்கள், பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பட்டா திருத்தம், பட்டா மெய்தன்மை, நத்தம் பட்டா வழங்குதல், கட்டிட உரிமை, பிறப்பு, இறப்பு பதிவு, ஆதரவற்ற விதவை சான்று, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இதர முகாமில் பெறப்படும் மனுக்கள், கனிம வளம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் விவரம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட விவரங்கள் அனைத்து விதமான ஓய்வூதிய உதவித்தொகை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரைந்து வழங்கிடவும், அலுவலகத்தை தூய்மையாக பராமரித்திடவும், அலுவலக பயன்பாட்டிற்கு போதுமான அளவு அதிவேக இணையதள வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி கொடுத்திடவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் தன்மைக்கேற்ப விரைந்து தீர்வு காண வேண்டும் என குன்னம் வட்டாட்சியருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் குன்னம் தாலுகா ஆபீஸ் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.