Perambalur: Collector personally inspects Labbaikudikadu and Jamaliya Nagar!

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகரில் வசித்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவது தொடர்பாக கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் புல தணிக்கை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரால், சட்டமன்ற கூட்டத் தொடரின் போது கடந்த 24.06.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பென்னகோணம் (வடக்கு) கிராமம், ஜமாலியா நகரில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் வாயிலாக லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், சுமார் 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் கிடைக்கப்பெறவுள்ளது. இதன்மூலம் இப்பகுதியிலுள்ள மக்கள் பயன்பெறவுள்ளனர்.

அதனடிப்படையில், தகுதியான குடும்பங்களுக்கு ரயத்து மனைப்பட்டா வழங்கும் வகையில் ஜமாலியா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், நத்தம் நிலவரித் திட்டப்பணிகள் மற்றும் பயன்பெறும் பயனாளிகளின் இடங்களில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் , வருவாய் துறையினருடன் நேரடி புல தணிக்கை ஆய்வு செய்தார்.

பின்னர், ரயத்து மனைப்பட்டாக்கள் பெறுவதற்கு நில உரிமைதாரர்களோ அல்லது அவரால் நியமிக்கப்படும் நியமனதாரர்களோ, நில அளவை அதிகாரிகள் நில அளவை செய்யும்போது உடனிருந்து அவரவர் இடங்களுக்கான எல்லைகளை காண்பித்திடவும், நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள பத்திரப்பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்கும்பட்சத்தில், உரிய அலுவலர்களால் அளவுப்பணி, புலத்தணிக்கை மேற்கொண்டு பட்டா வழங்கப்படும். இப்பணிகள் நில அளவைப்பணிகள் கோட்ட ஆய்வாளர், குன்னம் கோட்டம் நில அளவை அலுவலரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெறும். மேலும், நில அளவை சம்பந்தமான அனைத்து மனுக்களும் கோட்ட ஆய்வாளர், குன்னம் கோட்டம் (நில அளவை), பெரம்பலூர்-சார் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிட ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது, இந்த வாய்ப்பினை ஜமாலியா நகரில் காலிமனையாக வைத்திருப்பவரும் வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களும் பட்டா பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்தர்.  அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!