Perambalur: Collector request to public to celebrate Diwali without accident, noise and pollution!

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும்காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும்பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்றுமாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கவேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: அதிக ஒலி எழுப்பும்மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள்,நீதிமன்றங்கள்வழிபாட்டுத் தலங்கள் போன்றஅமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறும், அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!