Perambalur: Collector started planting 1 lakh palm seeds!
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆலத்தூர் ஒன்றியம் காரை ஊராட்சியில் தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணிகளை ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, காரை ஊராட்சியில்புதிய ஏரி கடைகால் வாய்க்கால் கரை ஓரங்களில் சுமார் 1 கி.மீ தொலைவிற்கு பனை விதைகள் நடும் பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
மண் அரிமானத்தை தடுத்தல், மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்து மழைநீரை சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பனை விதைகளை அதிக அளவில் நடுவதை ஊக்குவிக்கவும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 1,00,000 பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகளிலும் உள்ள ஏரிகள் மற்றும் குளக்கரைகளில் பனை மரங்களை நட திட்டமிடப்பட்டு, தலா ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது ஆயிரம் முதல் 2000 விதைகள் வீதம் 70 ஆயிரம் பனை விதைகளும், பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூர் வட்டாரத்திற்கு தலா 10,000 விதைகள் வீதம் 4 வட்டாரங்களுக்கும் 1,00,000 பனை விதைகள் நடப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஏரி, வாய்க்கால்கள், குளங்கள், பொதுப்பணித்துறை, ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.கே.சேகர், மற்றும் காரை ஊராட்சித் தலைவர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.