Perambalur: Consumer Protection Awareness Rally; The Collector started by waving the flag.
பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட, மாணவ மாணவிகள் பங்குபெற்ற “நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை” கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களின் உரிமைகளையும், கடமைகளையும் அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நுகர்வோர் பயன்பாடு குறித்தும், தரமான பொருட்கள், சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங்குவது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிரிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த 246 மாணவ/ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விளக்கியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணியானது சங்குபேட்டை வழியாக பெரம்பலூர் தாசில்தார் அலுவலகம் வரை சென்றது. பேரணியின்போது, நுகர்வோர் உரிமை அனைவருக்கும் சமம், நமக்கான கல்வி நுகர்வோர் கல்வி, கலப்படம் தவிர், ஏமாற்றப்படுவதைத் தவிர்த்திடு (நுகர்வோர் சட்டம் அறிந்திடு), வாங்கிய பொருளுக்கு பட்டி (BILL) கேள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ,மாணவிகள் கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.