Perambalur: Demolition of daily vegetable market; Collector review!
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தினசரி காய்கனி சந்தையினை கலெக்டர் பார்வையிட்டார். அங்குள்ள கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், அந்தக் கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25 ன் கீழ் ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 115 கடைகள் அங்கு கட்டப்படவுள்ளதால், அப்பகுதியினை பார்வையிட்ட அவர், விரைவில் பணிகளை தொடங்க அறிவுறுத்தினார்.
மேலும், தினந்தோறும் அதிக அளவிலான மக்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதால், காற்றோட்ட வசதியுடன், பகலில் வெளிச்சமாக இருக்கும் வகையில் சூரிய ஒளி உட்புகுமாறும், மழைநீர் உள்ளே வராத வகையிலுமான மேற்கூரையுடன் கட்டடங்கள் வடிவமைக்க வேண்டும் என்றும் பொறியாளருக்கு அறிவுறுத்தியதோடு, தினசரி காய்கனி சந்தைக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும் வரை, தற்காலிகமாக அங்காளம்மன் கோவில் அருகில் தினசரி காய்கனி சந்தை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தினையும் பார்வையிட்டார்.
பின்னர், 15வது வார்டு அண்ணா நகர் பகுதியில் மாநில நிதிக்குழு மானியம் 2024 -25 திட்டத்தின் கீழ் ரூ 94.00 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளையும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியினையும், ரோவர் ஆர்ச் பகுதியில் வாய்க்கால் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். மழைகாலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கும், பெரிய ஏரியினை தூர்வார நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.
பின்னர், பெரம்பலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில், குடிநீர் எடுக்கப்படவுள்ள கோனேரிபாளையம் கல்குவாரியினை ஆய்வு செய்த அவர், வெளி நபர்கள் யாரும் உள்ளே வராத வகையில், கம்பி வேலி அமைக்க வேண்டும் என்றும், கல்குவாரியில் இருந்து நீரைக் கொண்டு வந்து ஆலம்பாடியில் உள்ள 8 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைத்து நீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்ய திட்ட மதிப்பீட்டு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.372.00 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய விரிவாக்க கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். 12 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான பேருந்து நிறுத்தங்களும், 14 கடைகளும், ஒரு உணவகம், கழிவறை வசதிகளுடன் இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கலெக்டர், நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் ராமர், பொறியாளர் பாண்டியராஜ், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.